இரணியல் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.4.5 லட்சம் மது கொள்ளை-சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்றனர்

திங்கள்சந்தை :இரணியல் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளி சென்றனர்.இரணியல் காற்றாடிமூடு அருகே ஆழ்வார்கோவில் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் காம்பவுண்ட் கேட் பூட்டு உடைக்கப்பட்டு நேற்று காலை திறந்து கிடந்தது. இது தொடர்பாக டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் மைக்கேலுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் கடைக்கு விரைந்து வந்து பார்த்தார்.

அப்போது காம்பவுண்ட் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையின் இரும்பு சட்டத்தை உடைத்து உள்ளே சென்று ஏராளமான மது பாட்டில் பெட்டிகளை கடையின் வெளியே எடுத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த மைக்கேல் இது குறித்து இரணியல் காவல் நிலையத்திற்கும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய முயன்றனர். அப்போது சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய டிவிஆர் பாக்ஸையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து நடந்த சோதனையில் டாஸ்மாக் கடையில் இருந்த 46 பாக்ஸ் மது பாட்டில்களை கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளது தெரிய வந்தது. அதில் குவாட்டர், ஆப், புல் பாட்டில் என 2 ஆயிரத்து 74 மது பாட்டில்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 390 ஆகும். மேலும் ஒரு மினி டெம்போ அளவிற்கு மது பாட்டில் பாக்ஸ்களை எடுத்து கடைக்கு வெளியே வைத்து இருந்தனர். இதனால் மது பாட்டில்களை டெம்போவில் ஏற்றி கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கலாம் எனவும், திட்டம் நிறைவேறாததால் மதுபாட்டில்களை அப்படியே விட்டுச் சென்று இருக்கலாம் எனவும் தெரிகிறது.

இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இதே கடையில் சுவரை துளைத்து பணம் திருட முயற்சி நடந்தது குறிப்பிடதக்கது.

Related Stories: