மொத்தமாக ஆட்டம் காணும் அதானி குழுமம்!: பங்குகள் விலை தொடர்ந்து 4-வது நாளாக சரிவு..!!

மும்பை: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 4வது நாளாக தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன. அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளன. அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை சரிந்திருக்கிறது. அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிந்துள்ளது. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர்;  உலகின் 3வது மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர், ஆசியாவின் பெரும் பணக்காரர் என தொழிற்துறையில் கொடிகட்டி பறக்கும் குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானியின் கோட்டையை ஹிண்டன்பர்க் ரிசர்ஜ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை அதிரவைத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவன ஆய்வறிக்கை முன்வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் அடுக்கி வைக்கப்பட்ட சீட்டு கட்டுகளை போல மளமளவென சரிய தொடங்கியிருக்கிறது. அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தேசிய அரசியல் அரங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களில் பங்குகள் விலை 4வது நாளாக கடும் சரிவை சந்தித்துள்ளன. இதன் விளைவாக உலக பணக்காரர் வரிசையில் 3ம் இடத்தில் இருந்த தொழிலதிபர் அதானி 8வது இடத்திற்கு தள்ளப்பட்டார். குறிப்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதானி குழும பங்குகள் இதுவரை 5.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: