நவீன முறையில் சீரமைக்கப்பட்ட ஸ்டான்லி மருத்துவமனை சுரங்கப்பாதை திறப்பு

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை எம்சி சாலையில் நவீன முறையில் சீரமைக்கப்பட்ட ஸ்டான்லி அரசு மருத்துவமனை சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ திறந்து வைத்தார். வண்ணாரப்பேட்டை எம்.சி சாலையில் இருந்து பிராட்வே, பாரிமுனை, தங்கசாலை ஆகிய பகுதிகளுக்கு விரைவாக செல்ல ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் ராயபுரம் - பிராட்வே இடையே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை மேல்புறம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையம் இருப்பதால், இந்த சுரங்கப்பாதையில் நீர்கசிவு ஏற்பட்டு, பள்ளங்கள் ஏற்பட்டது.

இதனை மாநகராட்சி சார்பில், ஒவ்வொரு முறையும் சரிசெய்து வந்தனர். கடந்த மழைக்காலத்தில் இந்த பள்ளங்கள் அதிகமானதால், பைக்கில் சென்றவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தியிடம் தெரிவித்தனர். அவர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருதி, மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதன்படி, போக்குவரத்தை நிறுத்தி கடந்த ஒருமாத காலமாக நவீன முறையில் சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டது. அப்போது, நீர் கசிவு ஏற்படாதபடி சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ராயபுரம் திமுக பகுதி செயலாளர்கள் வ.பே.சுரேஷ், செந்தில்குமார், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: