மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட பாஜ பிரமுகர் கைது

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில், ரகளையில் ஈடுபட்ட பாஜ பிரமுகரை போலீசார் கைது செய்தனர். பழைய வண்ணாரப்பேட்டை காலியங்கராயன் தெருவில் தனியார் திருமண மண்டபத்தில், பாஜ மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தேசிய பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, சுதாகர் ரெட்டியிடம், தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த விஜயகுமார், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் மீது புகார் மனு அளித்தார். இதனால், கிருஷ்ணகுமாரின் ஆதரவாளர்கள் அவரை தடுத்து நிறுத்தியபோது, வாக்குவாதம் முற்றவே கைகலப்பாக மாறியது. இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, ராயபுரம் பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் பழனி புகார் ஒன்றை அளித்தார். அதில், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால், விஜயகுமாரை கட்சியில் இருந்து விலகி வைக்கப்பட்டிருந்த நிலையில், செயற்குழு கூட்டத்திற்கு வந்து ரகளை செய்வதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் விஜயகுமாரை (31), கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: