ஆட்டோவில் தவறவிட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகளை 1 மணி நேரத்தில் மீட்ட மயிலாப்பூர் போலீசார்: கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: ஆட்டோவில் பெண் ஒருவர் தவறவிட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம், பிளாட்டினம் நகைகளை புகார் அளித்த 1 மணி நேரத்தில் மீட்ட மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசாரை கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (64). இவர், தனது மகளின் திருமணத்திற்காக நகை வாங்க கணவர் மற்றும் மகளுடன் தி.நகரில் உள்ள நகைக்கடைக்கு கடந்த 27ம் தேதி வந்துள்ளார். அங்கு. ரூ.8 லட்சம் மதிப்புள்ள 4 சவரன் தாலிச்செயின், வைரம், பிளாட்டினம் நகைகளை வாங்கி கொண்டு ஆட்டோ மூலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரா் கோயிருக்கு வந்தனர்.

ஆட்டோ டிரைவர் கோட்டீஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினரை கோயில் தெப்பக்குளத்தில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து நகைகள் அடங்கிய பையை பார்த்த போது மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோட்டீஸ்வரி உடனே மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மயிலாப்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனசேகர் தலைமையில் எஸ்ஐ சஞ்சீவி, தலைமை காவலர் தியாகராஜன், ஜான்பிரதாப் மற்றம் முதல் நிலை காவலர் சங்கர் தினேஷ் ஆகியோர் கோட்டீஸ்வரி குடும்பத்தினர் இறங்கி தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று ஆட்டோ பதிவு எண் மூலம் விசாரணை நடத்தினர்.

பிறகு ஆட்டோ ஓட்டுனர் முகவரி மற்றும் செல்போன் எண்களை கண்டுபித்து தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவின் இருக்கையின் பின்புறம் பார்த்த போது அதில் நகைகள் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கோயம்பேடு பகுதிக்கு சென்று ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து நகைகளை மீட்டனர்.

புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் நகைகளை மீட்ட மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசாரை நேற்று போலீஸ் கஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Related Stories: