ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

பெரம்பூர்: பெரம்பூரில் 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை பெரம்பூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் 1 மணியளவில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பேரை மடக்கி  விசாரணை செய்தபோது, அவர்கள் வைத்திருந்த பையில் தலா 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் குமார் சிங் (24) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராம்லால் மண்டோ (54) ஆகிய 2 பேரும் எர்ணாகுளம் விரைவு ரயிலில் வந்து, பெரம்பூரில் இறங்கி அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த, பெரம்பூர் ரயில்வே போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: