எழும்பூர் அருங்காட்சியகத்தில் 76வது நினைவுநாளை முன்னிட்டு ‘காந்தியும் உலக அமைதியும்’ என்ற புகைப்பட கண்காட்சி திறப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தனர்

சென்னை: காந்தியின் 76வது நினைவுநாளை முன்னிட்டு, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் ‘காந்தியும் உலக அமைதியும்’ என்ற புகைப்பட கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்காக நேற்று தொடங்கி வைத்தனர். காந்தியின் 76வது நினைவுநாளையொட்டி, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் காந்தியடிகள் சிலை முன்பு மலர்களால் அமைக்கப்பட்ட காந்தியின் புகைப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, அருங்காட்சியகத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி வரவேற்றார். அப்போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய அமைச்சரான தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், எம்எல்ஏக்கள் ஜே.ஜே.எபினேசர், ஆர்.மூர்த்தி, ஆர்.டி.சேகர் மற்றும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

பின்னர் அருங்காட்சியகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த ‘காந்தியும் உலக அமைதியும்’ என்ற புகைப்பட கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்து ஒன்றாக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து, கண்காட்சியில் காந்தியின் உருவத்தில் புத்தகங்களால் அமைக்கப்பட்டிருந்த அரங்கின் முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிறகு கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக இருவரும் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து தலைமை செயலகம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முதல்வருடன் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

* அனுமதி இலவசம்

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தியும் உலக அமைதியும் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ- மாணவியர்கள் பார்வையிட ஏதுவாக இன்று முதல் 5ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். அனைவரும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

Related Stories: