காட்சிகளுக்கும், சப்-டைட்டிலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை ஈவிகேஎஸ், அமைச்சர் பேச்சு வீடியோ மார்பிங் செய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட நாராயணவலசு பகுதியில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பணிமனையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தொகுதி மக்களிடையே எழுச்சியை காண முடிகிறது. குறிப்பாக பெண்களுக்காக இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். இந்த திட்டங்கள் எல்லாம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

ஈரோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற தோழமை கட்சிகள் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமைச்சர் நேருவும் பேசுவதுபோல மார்பிங் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை விஷமிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். தேர்தல் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக இருவரும் பேசியதை பணம் தொடர்பாக பேசுவதுபோல மார்பிங் செய்துள்ளனர். வீடியோவில் உள்ள காட்சிகளுக்கும், வீடியோவில் உள்ள சப்-டைட்டிலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Related Stories: