அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் சசிகலா உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில்   சிறை சென்ற பிறகு, அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ததோடு, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டு, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறி, அவற்றை நிராகரித்தது. இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மனுவையும்  உயர்நீதிமன்றம் கடந்த 23ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் சசிகலா உச்ச நீதிமன்றத்தில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான எனது வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதற்கு எதிராக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் உச்ச நீதிமன்றம் எனது வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: