தமிழ்நாடு முழுவதும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன் மாற்றப்பட்டு மோகன் நியமனம்

சென்னை: செய்தித்துறை இயக்குநர் உள்பட தமிழகம் முழுவதும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய செய்தித்துறை இயக்குநராக மோகன், இந்து அறநிலையத்துறை ஆணையராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர் செயலாளர் டி.ரவிச்சந்திரன், தென்காசி கலெக்டராகவும், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வி.பி.ஜெயசீலன் விருதுநகர் கலெக்டராகவும், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி கலெக்டராகவும், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் பழனி, விழுப்புரம் மாவட்ட கலெக்டராகவும், சென்னை-கன்னியாகுமரி தொழில் தாழ்வார திட்ட இயக்குநர் பி.என்.ஸ்ரீதர், கன்னியாகுமரி கலெக்டராகவும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக இணை நிர்வாக இயக்குநர் கற்பகம், பெரம்பலூர் கலெக்டராகவும், செங்கல்பட்டு சப்-கலெக்டர் சஞ்சீவனா தேனி கலெக்டராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பதி, கோவை கலெக்டராகவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, திருவாரூர் கலெக்டராகவும், திருவள்ளூர் சப்-கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை கலெக்டராகவும், தென்காசி கலெக்டர் ஆகாஷ், தொழிலாளர் நலத்துறை துணை செயலாளராகவும், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராகவும், சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் இணை செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடப்பிரியா, ஆசிரியர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டாளராகவும், தேனி கலெக்டர் கே.வி.முரளிதரன், இந்து அறநிலையத்துறை ஆணையராகவும், திருவாரூர் கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன், கோவை வணிக வரித்துறை இணை ஆணையராகவும், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, தொழில் நுட்ப கல்வி இயக்குநராகவும், நில நிர்வாக கூடுதல் ஆணையர் ஜெயந்தி, பள்ளிக்கல்வித்துறை சிறப்பு செயலாளராகவும், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன நிர்வாக இயக்குநர் கதிரவன், தமிழ்நாடு சாலை திட்ட இயக்குநராகவும், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழு தலைமை செயல் அதிகாரி லட்சுமி, கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநராகவும், கைடன்ஸ் நிர்வாக இயக்குநர் பூஜா குல்கர்னி, தொழில் முதலீடு மேம்பாடு மற்றும் வர்த்தகத்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில திட்டக்கமிஷன் உறுப்பினர் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர், திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை சிறப்பு செயலாளராகவும், இதுவரை இந்தப் பொறுப்பை கனித்து வந்த ஹர்சகாய் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கோவை வணிக வரித்துறை இணை ஆணையர் எஸ்.சிவராசு, வருவாய் நிர்வாக இணை ஆணையராகவும், தொழில் கல்வித்துறை ஆணையர் லட்சுமி பிரியா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராகவும், இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்து அறநிலையத்துறை சிறப்பு அதிகாரி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஜவகர், தமிழ்நாடு வேளாண்மைத்துறை, நவீன மயமாக்கல் திட்ட இயக்குநராகவும், தேசிய சுகாதார திட்டம் மாநில திட்ட மேலாளர் சுப்புலட்சுமி, நில நிர்வாக இணை ஆணையராகவும், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் பணிகள், எம்.எஸ்.பிரசாந்த், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராகவும், விழுப்புரம் கலெக்டர் டி.மோகன், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநராகவும், தமிழ்வளர்ச்சி மற்றம் செய்தித்துறையின் இணை செயலாளராகவும் பதவி வகிப்பார்.

திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சித்துறை நிர்வாக இயக்குநராகவும், கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக செயல் இயக்குநராகவும், கன்னியாகுமரி கலெக்டர் அரவிந்த் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக நிர்வாக இயக்குநராகவும், கோவை கலெக்டர் சமீரன், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராகவும் (பணிகள்), தமிழ்நாடு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நீரஜ் மிட்டல், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழக தலைராகவும், தேசிய சுகாதாரத் திட்ட மாநில நகர்ப்புற மேலாளர் அழகு மீனா, தாம்பரம் மாநகராட்சி ஆணையராகவும், கடலூர் கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்ப வானர், திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர்(கல்வி)சினேகா ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும், திண்டுக்கல் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும், சென்னை சிப்காட் பொதுமேலாளர் ரத்தினசாமி, வேலூர் மாநகராட்சி ஆணையராகவும், பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளராக இருந்த சரண்யா அரி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும்(கல்வி) நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: