மணலி சடையங்குப்பம் சாலையில் நிறுத்தப்படும் டிரைலர் லாரிகளால் அடிக்கடி விபத்து: பொதுமக்கள் அவதி

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 19வது வார்டுக்குட்பட்ட சடையங்குப்பம், பர்மா நகர் இருளர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 3,000க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் சடையங்குப்பம் பிரதான சாலை வழியாக ஆண்டார்குப்பம், மணலி புதுநகர் போன்ற பகுதிகளுக்கு பைக், சைக்கிள் மற்றும் நடந்தும் செல்கின்றனர்.

இந்த சாலையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான கன்டெய்னர் யார்டு உள்ளது.

இங்கு வரக்கூடிய ஏராளமான டிரைலர் லாரிகள் சடையங்குப்பம் சாலையை ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தப்படுவதால், இந்த வழியாக ஆம்புலன்ஸ், குடிநீர் லாரிகள், ஆட்டோ போன்ற வாகனங்கள் அவசரத்துக்கு செல்ல செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. மேலும், நடந்து செல்லும் முதியவர்கள், சிறுவர்கள் இந்த கன்டெய்னர் லாரியில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். குடியிருப்புகள் அதிகமாக உள்ள இந்த பகுதிகளுக்கு நடுவே இது போன்ற கன்டெய்னர் யார்டு வைக்க அனுமதிக்க கூடாது என்று இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

ஆனாலும் அதிகாரிகள் அவற்றை பொருட்படுத்தாமல் இந்த பகுதியில் கண்டனர் யார்டு செயல்பட அனுமதி வழங்கி உள்ளனர். இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலிலும், விபத்திலும் சிக்குவதோடு இந்த பகுதியில் இயங்கும் மற்ற சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே இங்குள்ள கன்டெய்னர் யார்க்கு வரக்கூடிய லாரிகளை சடையங்குப்பம் சாலையில் நிறுத்தாமல் பொன்னேரி சாலையிலேயே நிறுத்தி ஒன்றன்பின் ஒன்றாக அனுப்ப போக்குவரத்து போலீசார் மற்றும் வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இங்கு செயல்படுகின்ற பவர் இன்ஜினியரிங் என்ற தனியார் கன்டெய்னர் யார்டில் அதன் இடவசதிக்கு ஏற்ப லாரிகளை அனுமதிக்காமல் கூடுதலாக லாரிகளை அனுமதிப்பதால் கன்டெய்னர் பெட்டிகளை ஏற்றி வரும் ட்ரெய்லர் லாரிகள் உள்ளே செல்வதற்கு இடமில்லாமல் சடையங்குப்பம் சாலையில் நிறுத்தப்படுகிறது. மணிக்கணக்கில் இந்த சாலையில் கன்டெய்னர் மற்றும் டிரைலர் லாரிகள் நிற்பதால் பொதுமக்கள் நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு அவதிப்படுகிறோம். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: