வேறு பெண்ணை 2வது திருமணம் செய்ததால் சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் வீட்டின் முன் காதல் மனைவி தர்ணா

ஆம்பூர்: சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் 2வது திருமணம் செய்ததால் அவரது ஆம்பூர் வீட்டின் முன் காதல் மனைவி தர்ணாவில் ஈடுபட்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கையை சேர்ந்தவர் ஜெயகணேசன் (27). அதே பகுதியை சேர்ந்தவர் ரம்யா (25). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இருவரும் காதலித்துள்ளனர். இதற்கு ஜெயகணேசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த 2016ல்  வீட்டிற்கு தெரியாமல் ஆந்திர மாநிலம் திருப்பதி சென்று  ரகசிய திருமணம் செய்து கொண்டனர். மனைவி ரம்யாவுடன், ஜெயகணேசன் பெற்றோருக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் ரம்யா 2 முறை கர்ப்பமாகி கணவர் வற்புறுத்தலால் கருகலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 2022ல் ஜெயகணேசன் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஆவடி ஆயுதப்படையில் போலீசாக பணிக்கு சேர்ந்தார்.

ரம்யா தன்னை உடன்  அழைத்து செல்லும்படி கூறியதற்கு அவர் காலம்தாழ்த்தியுள்ளார். இந்நிலையில் ஜெயகணேசன் சென்னையில் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரிந்து விசாரித்த ரம்யாவை அவர் மிரட்டியுள்ளார். இதற்கிடையில் 2022 நவம்பர் 17ம் தேதி ஜெயகணேசனின் பெற்றோர், சென்னையில் உள்ள பெண்ணுடன்  திருமணம் செய்து வைத்துள்ளனர். 2வது மனைவியுடன் சென்னையில் அவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 2வது மனைவியுடன் ஜெயகணேசன் கீழ்முருங்கைக்கு வந்தார். இதையறிந்த ரம்யா அங்கு வந்து வீட்டின் முன்னால் நீதி கேட்டு  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஜெயகணேசனின் உறவினர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த ஆம்பூர் மகளிர் போலீசார் சென்று அவரை மீட்டனர். மேலும், ரம்யா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: