கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுலின் நடைபயணம் ஸ்ரீநகரில் நாளை நிறைவு: 21 கட்சிகளில் 12 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு

காஷ்மீர்: கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் நடைபயணம் நாளை ஸ்ரீநகரில் நிறைவு பெறுகிறது. இதையொட்டி நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் 12 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணம் என்ற பெயரில் கடந்த செப். 7ம் தேதி கன்னியாகுமரியில் தனது நடைபயணத்தை தொடங்கினார். ஜம்மு - காஷ்மீர் வரையிலான இந்த நடைபயணத் திட்டத்தில், 3,970 கிமீ தூரம் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை ராகுல் காந்தி கடந்துள்ளார். நாளை ஸ்ரீநகரில் இவரது நடைபயணம் முடிவடைகிறது.

ஜம்மு - காஷ்மீரில் தற்போது நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில நாள் இடைவெளியில் மீண்டும் தனது பயணத்தை தொடங்கினார். இன்றைய நடைபயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்கிறார். நாளை நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒத்த கருத்துகளை கொண்ட 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அவற்றில் 12 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது; ஆனால் சில தலைவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தனர். குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம் ஆகிய 9 கட்சிகளின் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், சிவசேனா, கேரள காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்’ என்றனர்.

Related Stories: