கவுகாத்தி உயர்நீதிமன்றத்திற்கு ‘ஜீன்ஸ் பேண்ட்’ அணிந்து வந்த வக்கீல் வெளியேற்றம்: நீதிபதி அதிரடி உத்தரவு

கவுகாத்தி: கவுகாத்தி உயர்நீதிமன்றத்திற்கு  ‘ஜீன்ஸ் பேண்ட்’ அணிந்து கொண்டு வந்த வழக்கறிஞரை, நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் மகாஜன் என்பவர், ‘ஜீன்ஸ் பேண்ட்’ அணிந்து கொண்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர், ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக நீதிபதி கல்யாண் ராய் சுரானா முன்பு ஆஜரானார். வழக்கறிஞர்களுக்கான வழக்கமான உடையை அணியாமல், வழக்கறிஞர் மகாஜன் ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்ததை பார்த்து அதிருப்தி அடைந்தார்.

உடனடியாக அங்கிருந்த போலீசை வரவழைத்து அந்த வழக்கறிஞரை நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார். அவர் தரப்பு ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒரு வாரத்துக்கு நீதிபதி கல்யாண் ராய் சுரானா ஒத்திவைத்தார். இந்த சம்பவம் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘கற்றறிந்த வழக்கறிஞர் மகாஜன், மனுதாரருக்காக ஆஜராக வந்தபோது ‘ஜீன்ஸ் பேண்ட்’ அணிந்து வந்துள்ளார்.

எனவே அவரை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே அழைத்துச்செல்ப்பட்டார். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தலைமை பதிவாளர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும். அசாம், நாகாலாந்து, மிசோரம், அருணாசலபிரதேச பார் கவுன்சில்களுக்கும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்’ என்று ஆணையிட்டார்.

Related Stories: