கொலீஜியம் குறித்த விவகாரம்; நீதித்துறை வீழ்ந்தால் நாடு படுகுழியில் விழும்!: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து

மும்பை:கொலீஜியம் குறித்து விவகாரங்களுக்கு மத்தியில், ‘ஜனநாயகத்தின் கடைசி தூணான நீதித்துறை வீழ்ந்தால், நாடு படுகுழியில் விழும்’ என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கும் முறையான ‘கொலீஜியம்’ தொடர்பாக ஒன்றிய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, கொலீஜியம் குறித்து பலமுறை பொதுவெளியில் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் பேசுகையில், ‘கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களை இறுதி செய்யாதது, ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. ஜனநாயகத்தின் கடைசி தூணான நீதித்துறை வீழ்ந்தால், நாடு படுகுழியில் விழும். அப்போது புதிய இருண்ட சகாப்தம் தொடங்கும்.

கொலீஜியம் ஒரு நீதிபதியின் பெயரை பரிந்துரைத்தவுடன், ஒன்றிய அரசு 30 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும். தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய (என்.ஜே.ஏ.சி) சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, நாடாளுமன்ற இறையாண்மைக்கு எதிரானது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. சுதந்திரமான, அச்சமற்ற நீதிபதிகளை நியமிக்கப்படவில்லை என்றால் நீதித்துறையின் சுதந்திரம் என்னாகும்? ஒரு நீதிபதியை நியமிக்கலாமா வேண்டாமா என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காட்டிலும் வேறு யாருக்கு நன்றாகத் தெரியும்?. எனவே, கொலிஜியம் அமைப்பின் நடைமுறைகளில் வேறுபாடுகள் இருந்தால் கூட அதை ஏற்கவேண்டியது ஒன்றிய அமைச்சர் மற்றும் அரசின் கடமை’ என்றார்.

Related Stories: