அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை!: வெளியுறவு அமைச்சர் பேச்சு

புனே: நான் ஒன்றிய அமைச்சராவேன் என்று ஒருபோதும் கனவு கூட கண்டதில்லை என்று  ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், ‘நமது அண்டை நாடான சீனா, வழக்கத்திற்கு மாறான அண்டை நாடு. நமக்கு நிறைய அண்டை நாடுகள் உள்ளன. ஆனால், சீனா சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த அல்லது சூப்பர்பவர் நாடாக மாறலாம். சக்தி வாய்ந்த நாட்டுக்கு அருகில் வசிப்பது என்பது நமக்கு சவாலான விசயங்களில் ஒன்றாக இருக்கும்.

தென்சீன கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய கடல் பரப்புகளை சீனா ஆக்கிரமிப்பு முயற்சிகளில்  ஈடுபட்டு வருகிறது. தென்சீன கடல் பகுதியில் தனது படையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதால், பிற நாடுகளுக்கு கோபம் ஏற்படும் வகையிலான தூண்டி விடும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியின் அமைதி மற்றும் பாதுகாப்பு சீர்குலைந்து உள்ளது.

அணு சக்தி நாடான பாகிஸ்தானை பொருத்தமட்டில், பாண்டவர்கள் தங்களது உறவினர்களை தேர்ந்தெடுக்க முடியாது. நாம், நமது அண்டை நாட்டினரை தேர்ந்தெடுக்க முடியாது. இதுவே நமக்கு உண்மையாகவும் உள்ளது. நல்ல விசயங்கள் நடக்கும் என்று நம்புவோம். நான் ஒன்றிய அமைச்சராவேன் என்று ஒருபோதும் கனவு கூட கண்டது இல்லை. பிரதமர் மோடியை தவிர, வேறு யாரும் என்னை அமைச்சராக்கி இருக்கமாட்டார்கள்; அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

Related Stories: