இணையதள பக்கம் ‘ஹேக்’ காவல் ஆணையரிடம் மக்கள் நீதி மய்யம் புகார்

சென்னை: மக்கள் நீதி மய்யம்  இணையதள பக்கம் ’ஹேக்’ செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மநீம சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் முடக்கி மக்கள் நீதி மய்யம்  கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் வரும் 30ம் தேதி இணைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “மக்கள் நீதி மய்யம்  கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் விஷமிகளால் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்டவர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்” என மக்கள் நீதி மய்யம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இணையதள பக்கம் முடக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைமை நிலைய மாநில செயலாளர் அர்ஜூனர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்தார். பிறகு நிருபர்களிடம் அர்ஜூனர் கூறுகையில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதள பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டதில் அரசியல் சதி இருக்கிறது. எங்களை நேரடியாக தாக்க முடியாதவர்கள் மறைமுகமாக ‘ஹேக்’ செய்து தாக்க நினைக்கிறார்கள். யார், யார் மீது சந்தேகம் இருக்கிறது என்ற பட்டியலை புகார் மனுவில் கொடுத்துள்ளோம். காவல்துறையினர் சரியான முறையில் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

Related Stories: