தமிழ்நாட்டை கைப்பற்றும் பாஜ திட்டம் நடக்காது: நெல்லையில் வைகோ பேட்டி

நெல்லை: தமிழ்நாட்டை எப்படியாவது கையகப்படுத்தலாம் என பாஜ திட்டமிட்டு வருகிறது. அது ஒரு போதும் நடக்காது என நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். பாளை. தூய சவேரியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அளித்த பேட்டி: சேது சமுத்திர திட்டம் நாட்டுக்கு தேவையான திட்டம். தென்மாவட்ட பொருளாதாரத்தை உயர்த்தும். தூத்துக்குடி துறைமுகத்திற்கு துணை திட்டமாக அமையும். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு நாளைக்கு ஒரு நாள் முரண்பாடாக பேசி வருகிறார். பணத்தை விதைத்து தமிழ்நாட்டை எப்படியாவது கையகப்படுத்தலாம் என பாஜ திட்டமிட்டு வருகிறது. அது ஒரு போதும் நடக்காது. சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டு உணர்வுகளுக்கு எதிரான போக்கில் ஈடுபட்டு வருகிறது. தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் விரோதமான செயலில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்துத்துவாவை திணிக்க முயற்சி செய்கிறது. தமிழையும் தமிழ்நாட்டையும் ஒன்றிய அரசு அழிக்க பார்க்கிறது என்றார்.

Related Stories: