போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் செலுத்திய வாலிபர்கள்: மயங்கி விழுந்ததால் ஜி.ஹெச்சில் அனுமதி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து, ஊசி மூலம் நரம்பில் செலுத்திய வாலிபர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே வீரமலை கிராமத்தில் ஒரு கடையின் முன்பு, நேற்று முன்தினம் மாலை, கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 3 வாலிபர்கள், கடைக்காரரிடம் தண்ணீர் கேட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர் மற்றும் அங்கிருந்தவர்கள், அவர்களை எழுப்ப முயன்றனர். ஆனால், அவர்கள் எழுந்திருக்காததால், 3 பேரையும் அவர்கள் வந்த காரிலேயே ஏற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்த போது, 3 பேரும் போதை மயக்கத்தில் இருப்பது தெரியவந்தது.

தகவலறிந்து போச்சம்பள்ளி போலீசார் வந்து மயக்கம் தெளிந்த மூவரிடமும் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கல்லாவியைச் சேர்ந்த ஆசின், சுபாஷ், உபேக் என்பது தெரிந்தது. போதைக்கு அடிமையான 3 பேரும், நெடுங்கல் பகுதியில் போதை மாத்திரைகளை வாங்கி தண்ணீரில் கலந்து, அதனை ஊசி மூலம் தங்களின் நரம்பில் செலுத்தி உள்ளனர். அப்போது மூன்று பேருக்கும் போதை தலைக்கேறியுள்ளது. மேலும், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் காரில் வந்து கடையில் தண்ணீர் கேட்ட போது மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: