மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சியில் பயங்கரம் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது: விமானி பலி; 2 பேர் காயங்களுடன் மீட்பு

போபால்: மத்தியப்பிரதேசத்தில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு விமானிகள் உயிர் தப்பிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம், மொரினா மாவட்டத்தில் கோலாரஸ் விமானத்தளத்தக்கு அருகே விமான படைக்கு சொந்தமான சுகோய் மற்றும் மிராஜ் 2000 போர் விமானங்கள் நேற்று காலை வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. பாகர்கர் அருகே பயிற்சியின்போது திடீரென இரு விமானங்களும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுகோய் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாதுகாப்பாக வெளியேறி அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்கள். ஆனால் மிராஜ் விமானத்தில் இருந்த விமானி பலத்த காயமடைந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் விமான தளத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு போலீசார் மற்றும் விமானப்படை மீட்பு குழுவினர் விரைந்தனர். காயமடைந்த விமானிகள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமான விபத்தில் விமானத்தின் சில பாகங்கள் மத்தியப்பிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ள ராஜஸ்தானின் பாஹர்கர் பகுதியில் விழுந்தன. விமானங்கள் விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது டிவிட்டர் பதிவில், ‘‘விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் விபத்து செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் விமானப்படைக்கு மீட்பு பணிகளை விரைந்து முடிக்க ஒத்துழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: