சமூக ஊடகங்கள் மீதான புகாரை விசாரிக்க 3 மேல்முறையீடு குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு: முழுநேர உறுப்பினராக அசுதோஷ்சுக்லா ஐபிஎஸ் நியமனம்

புதுடெல்லி: சமூக ஊடகங்களுக்கு எதிரான பயனர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தீர்வு காண 3 மேல்முறையீட்டு குழுக்களை அமைத்து ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு தகவல்கள் குறித்து பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். இப்புகார்களை சமூக ஊடகங்கள் தீர்க்க குழு அமைத்துள்ளன. ஆனால் முறையான தீர்வு கிடைக்காத பயனர்களுக்கு உதவ ஒன்றிய அரசு, தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகளின் அடிப்படையில் ‘குறைகள் மேல்முறையீட்டு குழு’ அடுத்த 3 மாதத்தில் அமைக்கப்படும் என கடந்த அக்டோபரில் அறிவித்தது.

அதன்படி, தற்போது 3 மேல்முறையீட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று குழுவிலும், வெவ்வேறு அரசு அமைப்புகளில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த நிர்வாகிகள் 3 ஆண்டுகளுக்கு பணியில் இருப்பர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைவர், 2 முழு நேர உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் குழுவிற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி தலைமை தாங்குவார். ஓய்வு பெற்ற தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி அசுதோஷ் சுக்லா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைமை பொது மேலாளரும், தலைமை தகவல் அதிகாரியுமான சுனில் சோனி ஆகியோர் முழு நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2வது குழுவுக்கு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கொள்கை மற்றும் நிர்வாகப் பிரிவின் பொது இணை செயலாளர் தலைவராகவும், கடற்படையின் மாஜி கமாண்டர் சுனில் குமார் குப்தா மற்றும் எல் அன்ட் டி இன்போடெக் முன்னாள் துணைத்தலைவர் கவிந்திர சர்மா உறுப்பினர்களாகவும், 3வது குழுவிற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த விஞ்ஞானி கவிதா பாட்டியா தலைவராகவும், ரயில்வே முன்னாள் போக்குவரத்து சேவை அதிகாரி சஞ்சய் கோயல் மற்றும் ஐடிபிஐ இன்டெக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணகிரி ரகோதமராவ் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: