புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அனைத்து தரப்புக்கும் அதிகாரமளிக்க அரசு உழைக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: ‘ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரமளிக்க ஒன்றிய பாஜ அரசு உழைத்து வருகிறது’ என பிரதமர் மோடி கூறினார். குர்ஜார் சமூகத்தினரால் போற்றப்படும் பகவான் ஸ்ரீதேவநாராயணனின் 1111வது அவதார திருவிழாவையொட்டி, ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்திற்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். மலசேரியில் உள்ள தேவநாராயணன் கோயிலில் வழிபட்ட மோடி, மலசேரி துங்ரி கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: உலகம் தற்போது இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது. நாடு தனது வலிமையையும், சக்தியையும் வெளிப்படுத்தி உள்ளது. உலகளாவிய தளங்களில் தன்னை நிலைநிறுத்தி உள்ளது. பிறநாடுகளை சார்ந்திருப்பதை குறைத்துள்ளது. சுதந்திர போராட்டம் மற்றும் பிற இயக்கங்களில் குர்ஜார் சமூகத்தினர் நாட்டிற்கு அரிய பங்களிப்பை செய்துள்ளனர். ஆனால் வரலாற்றில் அவர்கள் தகுதியான இடத்தை பெறாதது நாட்டின் துரதிர்ஷ்டம். இருப்பினும், புதிய இந்தியாவில் கடந்த கால தவறுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 9 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்க ஒன்றிய பாஜ அரசு உழைத்து வருகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்துடன் நாங்கள் முன்னேறி வருகிறோம்.இவ்வாறு பிரதமர் பேசினார்.

* மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சி

டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது,’  ஒற்றுமையின் மந்திரம் ஒன்றே இந்தியா மகத்துவத்தை அடைய ஒரே வழி. ஆனால் இந்திய அன்னையின் குழந்தைகளிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்காக பல பிரச்னைகள் எழுப்பப்படுகின்றன.  இதுபோன்ற முயற்சிகள் இருந்தபோதிலும்  மக்களிடையே ஒருபோதும் வேறுபாடுகள் இருக்காது. ஏனெனில் ஒற்றுமையின் மந்திரம் தான் இறுதியான மாற்று மருந்து. இதன் மூலம் மட்டுமே இந்தியா மகத்துவத்தை அடைய முடியும்’ என்று பிரதமர் பேசினார்.

Related Stories: