குட்கா, புகையிலைக்கு நிரந்தர தடை விதிக்க அரசு கொள்கை முடிவெடுத்து தீர்மானம் இயற்ற வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க அரசு கொள்கை முடிவெடுத்து பேரவையில் தீர்மானம் இயற்றி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இளைஞர்களின் உழைப்புத்திறனை கெடுத்து, பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகவும், சமூக குற்றங்களுக்கு அடிப்படையாகவும், சுயகட்டுப்பாடு இழந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு அடித்தளமாகவும், புற்றுநோய் உள்ளிட்ட பிற நோய்களை ஏற்படுத்தி மனிதர்களை செயல்படாத நிலைக்கு தள்ளுவதில் முழுபங்கு வகிக்கும் இதுபோன்ற குட்கா, பான்மசாலா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் தடை செய்வது காலத்தின் கட்டாயம். எனவே, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்கொண்டு, இளைஞர்கள், மாணவர்களிடையே அதிகம் பரவக்கூடிய குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க கொள்கை முடிவெடுத்து, சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட வேண்டும்.

Related Stories: