வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று சான்று பெறும் திரைப்படங்களை மைனர்கள் பார்க்க அனுமதிப்பதை எதிர்த்து வழக்கு: தணிக்கைதுறை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திரையரங்கங்களில் திரையிடப்படும் திரைப்படங்களை காண்பதற்கு சென்சார் போர்டு சான்றிதழ் அடிப்படையில் ஆட்களை அனுமதிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரஷ்ணேவ் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது:

 தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு சென்சார் போர்டின் தணிக்கை சான்றிதழ் பெறப்படுகிறது. யு என்ற சான்றிதழ் பொதுவான அனைத்து வயதினரும் கண்டுகளிக்கலாம், ஏ என்ற சான்றிதழ் வயது வந்தவர்களுக்கு மட்டும், யுஏ என்ற சான்றிதழ் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலின்படி காண்பது, எஸ் என்ற சான்றிதழ் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் என்று வழங்கப்படுகிறது.

 ஆனால் பல தியேட்டர்களில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை காண மைனர்களையும் அனுமதிக்கிறார்கள். இது குறித்து மத்திய திரைப்பட தணிக்கை துறை தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. திரையிடுதல் சட்டத்தின்கீழ் இதுபோன்ற செயல்பாடுகள் குற்றமாகும். தியேட்டர்களில் பணியாற்றுபவர்கள் ஏ சான்றிதழ் படங்களை திரையிடும்போது 18 வயதுக்கு குறைந்தவர்களை அனுமதிக்க கூடாது.

இது தொடர்பான மத்திய தணிக்கைத்துறையின் வழிகாட்டுதல்களை திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர கண்டிப்பாக கடைபிடிக்கும்படி உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக தணிக்கை துறைக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறைக்கு நான் அனுப்பிய மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

 இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பிரஷ்ணேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, கார்ட்டூன் படங்களைகூட 7 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க கூடாது என்று விதி உள்ளது. ஆனால், இப்போதெல்லாம் வீடுகளில் சிறு குழந்தைகளும் பார்க்கிறார்கள் என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், திரையிடப்படும் திரைப்படம் 3 மாதங்களில் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுகிறது. இதை எப்படி சரிசெய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்யுமாறு ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறைக்கும், மத்திய திரைப்பட தணிக்கை துறைக்கும் உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தனர்.

Related Stories: