ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்: அமைச்சர் பி.கே. சேகர்பாபு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-74-க்குட்பட்ட ஓட்டேரி  நல்லா கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு  இன்று  (28.01.2023) பார்வையிட்டு  ஆய்வு  செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொசுத்தொல்லை மற்றும் கொசுக்களினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் மொத்தம் 3,312 தற்காலிக மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த பொது சுகாதாரம் பூச்சித்தடுப்புத் துறையில் 68 எண்ணிக்கையிலான வாகனங்களில் பொருத்தப்பட்ட பெரிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், 240 கையினால் எடுத்துச் செல்லும் புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் குடிசைப்பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புகைப்பரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொசுப்புழு உற்பத்தியில் நீர்வழித்தடங்களில் கொசுக்களை ஆரம்பநிலையில் கட்டுப்படுத்த 424 கைத்தெளிப்பான்கள், 300 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய கைத்தெளிப்பான்கள் மற்றும் 120 விசைத்தெளிப்பான்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்சமயம் கொசு ஒழிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்கள் 1 முதல் 15 வரை கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த நீர்வழிதடங்களில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள பெருநிறுவன சமூக பங்களிப்பு (CSR) நிதியின் கீழ் தலா ரூ.13.5 இலட்சம் என மொத்தம் ரூ.81 இலட்சம் மதிப்பீட்டில் 6 ட்ரோன் இயந்திரங்களும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் (13.01.2023) அன்று பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஓட்டேரி  நல்லா கால்வாயில்  ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு பணிகளை அமைச்சர் அவர்கள் இன்று (28.01.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது, மேயர் திருமதி ஆர். பிரியா , மத்திய வட்டார துணை ஆணையாளர் எஸ். ஷேக் அப்துல் ரஹ்மான், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி, திரு.வி.க. நகர் மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாநகர நல அலுவலர், மண்டல அலுவலர், மாமன்ற உறுப்பினர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: