விராலிமலை பகுதியில் தவிர்க முடியாத பொருளாக மாறியதா பிளாஸ்டிக்?

விராலிமலை: சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் பிளாஸ்டிக் தற்போது தவிர்கமுடியாத பொருளாக மாறிவருகிறது. சந்தைகளில் விற்கப்படும் காய்கறி முதல் தின்பண்டங்கள், தலையில் வைக்கப்படும் பூக்கள் என அனைத்து பொருட்களும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியே விற்கப்படுகின்றன. தின்பண்டங்கள், பூ விற்பனை, தேனீர் கடைகள் என தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் துறையினர் பிளாஸ்டிக் ஒழிப்பில் தனி கவனம் செலுத்தி மாசில்லா தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் வலுத்து தற்போது வருகிறது. தமிழக அரசு பொறுப்பேற்ற உடன் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் வெளிபாடாக பெரும்பாலான வணிக கடைகள், தேனிர் கடைகள், உணவகம் என பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் கட்டுப்படுத்தப்பட்டது.

அந்த நிலை தொடராமல் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால், நீர்நிலை உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள் என ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதோடு மண்வளம் பாதிக்கப்பட்டு மலட்டு தன்மையடைந்து விவசாயம் கேள்விக்குறியாகிவிடும் என்று அரசு எவ்வளவோ பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தன், நலனை மட்டுமே பெரும்பாலான பொதுமக்கள் கருத்தில் கொண்டு வருவதோடு, வருங்கால சந்ததியினரை கவனத்தில் கொள்ள மறந்து விடுகின்றனர். தேனீர், காபி மற்றும் உணவகங்களில் கட்டப்படும் சாம்பார், சட்னி உள்ளிட்ட உணவு பொருள்கள் பார்சல் வாங்கி வருவதில் தொடங்கி, இட்லி வேக வைப்பது முதல், பாலிதீன் பேப்பர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தப்படும் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர், ஸ்டிரா உள்ளிட்டவை பெரும் அபாயத்தை உருவாக்குகின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதை கட்டுக்குள் கொண்டுவர தயவு தாட்சனையின்றி கடும் தண்டனையுடன் கூடிய சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் இப்போது தள்ளப்பட்டுள்ளோம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால், ஏராளமான மக்காத கழிவுகள் தேங்குகின்றன. இவற்றை எரித்தால் காற்று மாசடையும், தேங்கி நின்றால் மண் வளம் பாதிக்கப்படும், கடலில் சேர்ந்தால் கடல் வாழ் உயிரினங்கள் அழியும், கால்நடை மற்றும் பறவைகள் உயிரிழப்பு என எல்லா வகையிலும் அது சேரும் இடங்களிலும் பாதிப்பை மட்டுமே பிளாஸ்டிக் உருவாக்குகின்றன. மக்கள் இதை புரிந்து, மாற்றத்துக்கு பழகிக்கொள்ள வேண்டும். துணிப்பை பயன்படுத்தும் போது, அதை தூக்கி எறியாமல், பல முறை பயன்படுத்துவோம். அதனால், கழிவுகளும் குறையும். எனவே மக்களும், வணிக கடைகளும் துணிப்பை பயன்படுத்தும் முயற்சியில் பங்கேற்க வேண்டும். மக்களும், சிறிய, பெரிய வணிக கடைகள் மனது வைத்தால் மட்டுமே பிளாஸ்டிக் இல்லாத உலகை உருவாக்கி மாசில்லா தமிழகத்தை கட்டமைக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

Related Stories: