கடந்த ஆண்டில் 11,928 பிரசவங்கள் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்து ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனை சாதனை: கண்காணிப்பாளர் தகவல்

வடசென்னை ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனையில், கடந்த ஆண்டில் 11,928 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்து சாதனை படைத்துள்ளதாக, கண்காணிப்பாளர் சாந்தி இளங்கோ தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனை என்றாலே ஒருவித தயக்கத்துடன் பார்க்கும் மனநிலை மாறி, தற்போது தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கைகளால் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அதிநவீன சிகிச்சையுடன் அரசு மருத்துவமனைகள் சிறந்து விளங்கி வருகிறது. ஒருவர், மிகவும் உடல் நலம் குன்றி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டால் உடனடியாக அவர்கள் கூறும் பதில், ‘‘உடனடியாக இவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்’’.

இதை பலரும் கேட்டிருப்போம்.  தனியார் மருத்துவமனைகளால் முடியாத சிக்கலான பல அறுவை சிகிச்சை உட்பட பல சிகிச்சைகளை வெற்றிகரமாக அரசு மருத்துவமனைகள் செய்து பலரது உயிரை காப்பாற்றி வருகின்றது. அதிகப்படியான மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் அதிகம் வந்து செல்வதால், சிறுதளவில் சுகாதாரமின்மை இருந்தாலும் சிகிச்சை முறையில் எந்தவித பாகுபாடின்றி அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவமனைகள் சிறந்து விளங்கி வருகின்றன. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்ற நிலை வரும்போது, பலரும் நாடுவது அரசு மருத்துவமனை தான்.

மேலும், எந்தவித கட்டணமும் இன்றி பொதுமக்களின் சேவை ஒன்றே குறிக்கோள் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடும் வகையில் தற்போது சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வடசென்னை மக்களின் அரணாய் செயல்பட்டு வரும் ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனை தமிழகத்திலேயே பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்து, அதிகப்படியான பிரசவங்களை பார்த்து சாதனை படைத்து வருகிறது. கடந்த 1950ம் ஆண்டு வடசென்னையில் ராயபுரம் பகுதியில் ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனை தொடங்கப்பட்டது.

வடசென்னையை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் இந்த மருத்துவமனையில் மகப்பேறு காலங்களில் சிகிச்சை எடுத்துக் கொண்டு, இதே மருத்துவமனையில் பிரசவம் பார்த்து வருகின்றனர். சென்னையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அடுத்தபடியாக வடசென்னை ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை அதிகப்படியான பிரசவங்களை பார்த்து  வருகிறது. இந்த மருத்துவமனையில் 510 படுக்கைகளுடன் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக 100 புதிய படுக்கைகள் கொண்டு வரப்பட்டு 610 படுகைகளுடன் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

உயிர் காக்கும் கருவியான வெண்டிலேட்டர். நவீன சிகிச்சை கருவிகளான லேப்ராஸ்கோபி மற்றும் ஸ்கேனர் போன்ற கருவிகளும், தீவிர சிகிச்சை பிரிவு, ஆதி தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகளும்  இந்த மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் மொத்தும் 11,928 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. இதில், 60 விழுக்காடுகள் சுகப்பிரசவங்களாகவும், மீதமுள்ள 40 விழுக்காடு அறுவை சிகிச்சை பிரசவங்களாகவும் நடைபெற்றுள்ளது. பிரசவத்தின்போது கடந்த ஆண்டு 0.06 விழுக்காடு தாய் உயிரிழப்பும், 0.05 விழுக்காடு குழந்தைகளின் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 3081 குழந்தைகள் சிகிச்சை பெற்று நல்ல முறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், எடை குறைவான 2,133 குழந்தைகள் மற்றும் குறைமாத குழந்தைகள் 1,652 பேர் உள்ளிட்டோர் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்திலேயே மிகவும் எடை குறைவான 0.650 கிராம் குழந்தைகள் முதல் பல்வேறு எடை குறைவான குழந்தைகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்ல முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்து சாதனைபுரிந்த இந்த மருத்துவமனைக்கு தமிழக அரசின் விருதும் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடசென்னை மக்களின் உயிர் துடிப்பாக இந்த ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை விளங்கி வருகிறது. கோடிகள் கொட்டி கொடுத்தாலும், ஒரே ஒரு குழந்தை வரம் கூட கிடைக்காமல் தனியார் மருத்துவமனை மருத்துவமனையாக படி ஏறும் நிலை இன்று இருக்க, சாதாரணமாக வந்து குழந்தைகளை பெற்றுக் கொண்டு, ஓரிரு நாளில் தாயும், சேயும் வீட்டிற்கு சென்று விடும் ஒரு சாதாரண மருத்துவமனையாக ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை விளங்கி வருகிறது.

தற்போது இந்த மருத்துவமனைக்கு புதிய  கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சென்னை நாடாளுமன்ற  உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி நிதியிலிருந்து ரூ.50 லட்சம்  மதிப்பீட்டில் உயிர் காக்கும் இன்றியமையா உபகரணங்களை வழங்கி உள்ளார். இதுபோன்று,  தமிழக அரசின் ஒத்துழைப்போடும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின்  செயல்பாட்டினாலும், ராயபுரம் எம்எல்ஏ முயற்சியாலும் தற்போது புதிய கட்டிடம்  கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அந்த பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

Related Stories: