மணலி அருகே ரூ.19 கோடியில் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளாக முடிவடையாத கால்வாய் மேம்பாலப் பணி: பொதுமக்கள் வேதனை

திருவொற்றியூர்: மணலி அருகே சடையங்குப்பம் பகுதியில் ரூ.19 கோடியில் தொடங்கப்பட்ட கால்வாய் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரு மழையின் போது புழல் ஏரியில் மழைநீர் நிரம்பி மதகு திறக்கப்பட்டு  அங்கிருந்து உபரி நீர் கால்வாய் வழியாக ஆ.முல்லைவாயல், கொசப்பூர், சடையங்குப்பம்  ஆகிய பகுதிகளை கடந்து எண்ணூரில் உள்ள முகத்துவார ஆற்றில் கலக்கிறது. இவ்வாறு கால்வாய் வழியாக பெருக்கெடுத்து வரும் உபரிநீர் சடையங்குப்பம் பகுதிகளில் உள்ள பர்மா நகர், இருளர் காலனி போன்ற பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது.

இதன் காரணமாக, அங்குள்ள மக்கள்  வெளியே வரமுடியாமல் தவிப்பார்கள். பின்னர், ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படை வீரர்கள் உதவியுடன் மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள். இப்படி மழைக் காலத்தில் சடையங்குப்பம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கடந்த 2008ம் ஆண்டு மறைந்த கே.பி.பி.சாமி அமைச்சராக இருந்தபோது பர்மா நகர், இருளர் காலனி அருகே அன்றைய திட்ட மதிப்பீட்டின்படி ரூ.19 கோடி செலவில் கால்வாய் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த பணி பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் நடந்து தற்போது வரை முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் பர்மா நகர், இருளர் காலனியில் வசிக்கும் மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், முதியவர்கள் பாலத்தை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இந்த மேம்பாலப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் 15 ஆண்டு காலம் ஆகியும் இதுவரை கால்வாய் மேம்பால கட்டுமான பணி முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதோடு  திட்ட மதிப்பீட்டு தொகை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அவசரத்திற்கு திருவொற்றியூருக்கு செல்ல முடியாமல் சிரமப்படுவதால் கால்வாய் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் 15 ஆண்டுகள் ஆகியும் இந்த பணி முடிவடையவில்லை.  மேம்பால கட்டுமான பணியில் அதிகாரிகள் சரியாக திட்டமிடாததும், செயல்முறையின்மை காரணமாகவும் கட்டுமான பணி மதிப்பீட்டுத் தொகை அதிகமாகி மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எனவே கால்வாய் மேம்பால பணியை விரைவாக முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: