வரும் 30ம் தேதி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் கட்சி இணைப்பு? சமூக வலைதள பதிவால் பரபரப்பு

சென்னை: வரும் 30ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய உள்ளதாக நேற்று வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், தீவிர அரசியலில் ஈடுபட விரும்பி மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். தேர்தலில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்ததால் கட்சி  நிர்வாகிகள் பலரும் விலகினர். இதனால் விரக்தி அடைந்த கமல்ஹாசன், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

இந்நிலையில், கடந்த மாதம் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நடந்த பாதயாத்திரையில், ராகுல் காந்தி தலைமையில் கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று மாலை மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்போவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டது. வரும் 30ம் தேதி அதற்கான இணைப்பு விழா டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற தகவல் வெளியானதை அறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பலத்த அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவல் அரசியல் வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவியது. சமூக வலைத்தளங்களில் கமல்ஹாசனை பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கள் கட்சியின் வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து நேற்றிரவு 6.59 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: