சுகாதாரம், கல்வி உள்ளிட்டவைகள் மேம்பாட்டால் இந்தியாவின் மீள் எழுச்சியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை

சென்னை: சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளின் மேம்பாடுகளால் இந்தியாவின் மீள் எழுச்சியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கும் என  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, குடியரசு தின செய்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது: நாட்டின் 74வது குடியரசு தினத்தையொட்டி, நம்முடைய அரசியல் சட்டத்தின் தந்தையான அம்பேத்கரின் அபரிமிதமான நுண்ணறிவும், தொலைநோக்கும் செறிந்த எழிலார்ந்த அரசியல் சட்டத்தினை தந்தமைக்காக  நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம். தாய்நாட்டிற்காக வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வீரமங்கை ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, பூலித்தேவன், வீரபாண்டிய  கட்டபொம்மன் உள்ளிட்டோரின் அர்ப்பணிப்பை வணங்க கடமைப்பட்டுள்ளோம்.

அதேபோல, மருத்துவர்கள், நலவாழ்வுப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கும், உலகையே ஆட்டிப் படைத்த பெருந்தொற்று காலத்தில், உயிரையே பணயம் வைத்து அவர்கள் செய்த மாபெரும் பணிகளுக்காக நன்றிகள் பல.

வெகு வேகமான பொருளாதார வளர்ச்சியைக் காண்கிற நாடுகளில்  இந்தியா முன்னணியில் உள்ளது. இதேபோன்று, ஆக சிறப்பாக வளரும் தொழில் தொடக்கச் சூழலமைப்பிலும், உலகிலேயே நம்நாடு முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல, தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் மிகச் சிறப்பாகப் பங்களித்து, நம்முடைய மாநிலத்திற்கும் நம்முடைய நாட்டிற்கும் விளையாட்டு வீரர்கள்  பெருமை சேர்த்துள்ளார்கள்.

இதேபோல, சுகாதாரம், கல்வி, உள்கட்டுமானம், தொழிலக  ஆதாரம், திறன்மிக்க மனித வளம் ஆகிய துறைகளில் தமிழ்நாடு கண்டுள்ள மேம்பாடுகள், இந்தியாவின் மீள் எழுச்சியில் முன்னணி வகிக்கும். அயல்வாழ் தமிழர் குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது. நீங்கள் எங்கிருந்தாலும், உங்களோடு இந்த நாடு துணை நிற்கும் என்பதையும், உங்களின் நியாயமான ஆர்வங்களையும், நலன்களையும் பாதுகாக்கும் என்பதையும் இந்த தருணத்தில் உங்களுக்கு உறுதிகூற விழைகிறேன். தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கான  பிரதமரின் முனைப்புகளின் விளைவாக, நாடு முழுவதும் தமிழ் மொழியைப் பற்றிய விழிப்புணர்வு அதிகப்பட்டுள்ளது.

அந்தவகையில், காசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்பட்டுள்ள சுப்பிரமணிய பாரதியார் இருக்கை, உயர் குடிமைப் பணிகளுக்கான ஒன்றியத் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதுவதற்கான வசதி மட்டுமல்லாது, ஒன்றிய அரசாங்கத் துறைகளில் கீழமைப் பணிகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்யும் தேர்வாணையமும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்மொழியை விருப்ப மொழியாக அங்கீகரித்துள்

ளது.  நம் நாடு தற்சார்பை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.

அதன் வெற்றிப் பயணத்தில் பெருமிதமிக்க சாட்சிகளாகவும் ஈடுபாடுமிக்க பங்கேற்பாளர்களாகவும் நாம் விளங்குகிறோம். நமக்கான அடிப்படை உரிமைகளை நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது. அதே சமயம், நம்முடைய அடிப்படை கடமைகளை நாம் நிறைவேற்றவேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் எதிர்பார்க்கிறது. இந்த நல்ல தருணத்தில், நம்முடைய அரசியலமைப்புச் சட்டக் கடமைகளுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம். இதுவே, நம்முடைய விடுதலைப் போராளிகளின் கனவுப்படியான இந்தியாவை நனவாக்கும் வழியுமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: