‘அதிமுக தோற்ற வரலாறே இல்லையாம்’ எட்டப்பர்களுக்கு பாடம் புகட்டப்படும்: நிர்வாகிகளுக்கு எடப்பாடி ‘தெம்பு’

ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள்  அமைச்சர்கள் செங்கோட்டையன், முனுசாமி, கருப்பணன், ராஜேந்திரபாலாஜி,  ராமலிங்கம், உடுமலை ராதாகிருஷ்ணன், உதயகுமார், சண்முகம், நத்தம்  விஸ்வநாதன், செம்மலை, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் சபாநாயகர்  தனபால், பொன்னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தேர்தல் என்பது நமக்கு புதிதல்ல. பல தேர்தல்களில் போட்டியிட்டு, களம் கண்டு வெற்றி பெற்றவர்கள் அதிமுகவினர்.

நமக்கு சோதனையும் புதிதல்ல. பலமுறை சோதனைகளை தாண்டி வெற்றி கண்டுள்ளோம். இன்று சில பேர் எட்டப்பர் வேலை செய்து கொண்டு இந்த இயக்கத்தை முடக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்று எதிரிகளோடு கைகோர்த்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேர்தல் வெற்றி மூலம் பாடம் புகட்ட வேண்டும். அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர் அதை இமை போல காத்த ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் பிள்ளைகள் நாம். அதை நாம் அனைவரும் உணர்ந்து ஒன்றுபட்டு, உழைத்து வெற்றி என்ற மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும்.

இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்நோக்கி கொண்டு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி நமது உழைப்பினை செலுத்தி, சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை பெற்று மிகப்பெரிய சரித்திர வெற்றியை நாம் பெற வேண்டும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே தெரியவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் நான்கைந்து நாட்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதிமுக கரைவேட்டி கட்டியவர்கள் மட்டும் தெரிவார்கள்.

அதிமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என இன்னும் பலர் எண்ணி கொண்டு இருக்கின்றனர். அதிமுக தோற்ற வரலாறு இல்லை. நாம் சரியான முறையில் உழைத்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். நம்மை நாம் தான் தோற்கடிக்க முடியும். வேறு யாராலும் தோற்கடிக்க முடியாது. இவ்வாறு பேசினார். சில பேர் எட்டப்பர் வேலை செய்து கொண்டு இந்த இயக்கத்தை முடக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என எடப்பாடி தெரிவித்தார். இது, பாஜவை மறைமுகமாக தாக்குகிறாரா அல்லது ஓபிஎஸ்சை சொல்கிறாரா என  தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் புரியவில்லை.

‘மெடிக்கல் பிட்னஸ் இருந்தா வா இல்லைனா ஓடிடு’

ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தங்குவதற்கு தேவையான இடவசதிகள் செய்து தரப்படும். எனவே ஒவ்வொரு நிர்வாகியும் வாக்காளரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுங்கள். குறிப்பாக சர்க்கரை நோய் பாதிப்பு, இதய பாதிப்பு உள்ளவர்களை எக்காரணம் கொண்டும் ஓட்டு கேட்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டாம். ஆர்வக்கோளாறில் சிலர் பணியாற்ற வருவார்கள். அவ்வாறு வந்தால் அவர்களை திருப்பி அனுப்பி விடுங்கள். இது மிகவும் முக்கியம். நல்ல திடகாத்திரமானவார்களை மட்டும் பணியில் ஈடுபடுத்துங்கள்’’ என்றார்.

* 30ம் தேதி வேட்பாளர் அறிவிப்பு

தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமியிடம் வேட்பாளர் அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்ற நிருபர்கள் கேட்ட போது, ‘‘விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றார். இதனிடையே வருகிற 30ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று மூத்த நிர்வாகிகள் தரப்பில் கூறினர்.

* ‘தலைவரே... இப்ப ராகு காலம்’  

ஈரோடு அடுத்த செங்கோடம்பாளையத்தில் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 11.35 மணிக்கு எடப்பாடி பழனிசாமி மண்டபத்திற்குள் வந்தார். உள்ளே வந்ததும் சில நிர்வாகிகள் 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலம் என்று எடப்பாடியிடம் கூறினர். இதையடுத்து மேடை ஏறாமல் நேரடியாக மணமகன் அறைக்குள் சென்றுவிட்டார். பின்னர் 25 நிமிடங்கள் காத்திருந்து 12 மணிக்கு எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வந்தார்.

Related Stories: