சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடியின் ஆவண படத்தை மடிக்கணினியில் பார்த்த மாணவர்கள்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடியின் ஆவணப் படத்தை மடிக்கணினியில் திரையிட்டு இந்திய மாணவர் சங்க மாணவர்கள் பார்த்தனர். பிரதமர் மோடியின் ஆவண படத்தை பி.பி.சி. நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த படம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், இதனை இந்திய மாணவர்கள் சங்கத்தினர் நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் திரையிட முடிவு செய்தனர். சமீபத்தில், சென்னை மாநில கல்லூரியின் விக்டோரியா விடுதியில் மாணவர்கள் இந்த ஆவணப் படத்தை திரையிட்டனர். தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் திரையிட இருப்பதாக அறிவித்தனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்க மறுத்ததோடு, அவ்வாறு திரையிட்டால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்திருந்த நிலையில், பல்கலைக்கழக இந்திய மாணவர் சங்கத்தினர் அதனை மீறி பி.பி.சி. நிறுவனம் வெளியிட்ட மோடியின் ஆவணப் படத்தை பல்கலைக்கழக வளாகத்தில் தரையில் அமர்ந்தபடி, மடிக்கணினி வாயிலாக திரையிட்டு பார்த்தனர். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் மாணவர்கள் படத்தை திரையிடக்கூடாது என்றும், எழுந்து வெளியில் செல்லுங்கள் என்றும் கூறி உள்ளது. இருப்பினும் மாணவர்கள் ஆவணப்படத்தை திரையிட்டதால், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று பரபரப்பு நிலவியது.

Related Stories: