பா.ஜ.க. சிக்னலுக்காக காத்திருக்கும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

சேலம்: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பாஜகவின் உத்தரவிற்காக கமலாலயத்தில் காத்து கிடப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதன் பின்னர் விழாவில் பேசிய அவர், நான் திருமண விழாக்களில் மணமக்கள் எப்படி இருக்க கூடாது என்று சொல்வேன். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மாதிரி இருந்து விடாதீர்கள். பக்கத்தில் பக்கத்தில் சட்டபேரவையில் உட்கார்ந்து இருப்பார்கள். அதற்கு நான் சாட்சி. கண்கூடாக பார்த்து இருக்கிறேன். ஆனால், ஒருத்தர் ஒருத்தர் பார்த்துக் கொள்ளமாட்டார்கள். பேசிக்கொள்ள மாட்டார்கள்.

பிரதமர் மோடிக்கு யார் மிகபெரிய அடிமை என்கிற போட்டியோ நடக்கும். ஆட்சியில் இருந்தவரைக்கும் அவர்கள் 2 பேருக்குள்ளேயும் எந்த பிரச்சினையும் இல்லை. இப்போது ஆட்சி இல்லை என்றவுடனே நீயா, நானா? என பிரச்சினை நிலவுகிறது என்று கூறியுள்ளார். சட்டமன்றத்தில் நான் பேசியபோது, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அவர்களே 2 பேரும் என்னுடைய காரை தவறுதலாக எடுக்க போயிவிட்டீங்க.

தயவு செய்து எடுத்துக்கொண்டு போங்க. ஆனால் ஒன்றே ஒன்று கமலாலயம் மட்டும் போயிடாதீங்க என்று சொன்னேன். அப்போது அண்ணன் எடப்பாடி பழனிசாமி மட்டும் பேசவே இல்லை. அதற்கான அர்த்தம் இப்போது தான் தெரிகிறது. அண்ணன் ஓ.பி.எஸ். மட்டும் எழுந்து என்னுடைய கார் எந்த காலத்திலும் கமலாலயம் செல்லாது என்று கூறினார். இப்போது 2 பேரும் பாஜக சிக்னலுக்காக போட்டி போட்டுக்கொண்டு கமலாலயத்தில் காத்து கிடக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: