குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் நலத்துறை அதிரடி

திருவள்ளூர்: குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 102 தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் நசீமுதீன், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் அறிவுறுத்தல்படியும், சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி, தொழிலாளர் இணை ஆணையர் வேல்முருகன் ஆகியோர் வழிகாட்டுதல் படியும், திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுதா தலைமையில்  தேசிய பண்டிகை விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 1958ம் ஆண்டு தொழில் நிறுவனங்கள், தேசிய பண்டிகை  மற்றும் சிறப்பு விடுமுறைகள் சட்டம் மற்றும் விதிமுறைபடி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், முறையாக விதிமுறைகளை பின்பற்றாமலும் செயல்பட்ட 102 நிறுவனங்கள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுதா கூறுகையில், ”தேசிய விடுமுறை தினங்களில்  தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு அன்றைய தினத்தில் இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும் அல்லது வேறு தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படவேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Related Stories: