நாகேஸ்வரராவை தரக்குறைவாக பேசினார்:பாலகிருஷ்ணாவை ‘தாக்கிய’நாக சைதன்யா, அகில் பிரதர்ஸ்

ஐதராபாத்: தாத்தா நாகேஸ்வர ராவ்வை தரக்குறைவாக விமர்சித்த பாலகிருஷ்ணாவை, சரமாரியாக அறிக்கை மூலம் தாக்கியுள்ளனர் பேரன்கள் நாக சைதன்யா, அகில். தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் நாகேஸ்வர ராவ். இவரது மகன் நாகார்ஜுனா, பேரன்கள் நாக சைதன்யா, அகில். அனைவருமே நடிகர்களாக உள்ளனர். நாகேஸ்வர ராவ் குடும்பத்துக்கும் பாலகிருஷ்ணாவுக்கும் ஏழாம் பொருத்தம். இந்நிலையில் சமீபத்தில் வெளியான பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படம், பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதன் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

அப்போது பேசிய பாலகிருஷ்ணா, ‘அக்கினேனி (நாகேஸ்வர ராவின் குடும்ப பெயர்), தொக்கினேனி... அஅ ரங்காராவ் (நடிகர் எஸ்.வி.ரங்காராவ்)... ஈஈ ரங்காராவ்... என ஏளனமாக பேசினார். அப்போது பாலகிருஷ்ணா மது குடித்திருந்ததாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சு, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பாலகிருஷ்ணா இப்படி பேசும்போது,  அருகில் இருந்தவர்கள் சிரித்தபடி இருக்கிறார்கள். தெலுங்கு சினிமாவின் இரண்டு முக்கிய சாதனையாளர்களான நாகேஸ்வர ராவ், எஸ்.வி.ரங்கா ராவ் ஆகியோரை பாலகிருஷ்ணா இழிவுபடுத்தியதற்கு ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது பற்றி அறிக்கை வெளியிட்ட நாக சைதன்யா, அவரது தம்பி அகில்,  ‘நந்தமுரி தாரக ராமராவ் (பாலகிருஷ்ணா) , அக்கினேனி நாகேஸ்வரராவ் மற்றும் எஸ்.வி.ரங்காராவ் ஆகியோரின் பங்களிப்புகள் தெலுங்கு சினிமாவில் பெருமை வாய்ந்தது. அவர்கள் அசைக்க முடியாத தூண்களாக இருக்கின்றனர். அவர்களை தரக்குறைவு செய்யும்படி நடந்து கொள்வது நம்மை நாமே இழிவுபடுத்துவதற்கு சமமானது’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பாலகிருஷ்ணா தன்னைத்தானே இழிவுபடுத்திக்கொண்டுள்ளார் என சகோதரர்கள் இருவரும் காட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த மோதல் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: