பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நிறைவு பழநி மலைக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பழநி: பழநி மலைக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு பணியில் சுமார் 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 17 வருடங்களுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடுதல் கடந்த டிச.25ம் தேதி நடந்தது. கடந்த 18ம் தேதி பூர்வாங்க பூஜை துவங்கியது. தொடர்ந்து மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான படிப்பாதை பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு படிப்பாதையில் உள்ள பாதவிநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு நிறைவு வேள்வி நடந்தது. காலை 9.50 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இதனைத்தொடர்ந்து கிரிவீதியில் உள்ள 5 மயில்கள், பாதவிநாயகர், சேத்ரபாலர், சண்டிகாதேவி, இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுதசுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் முதலான உபதெய்வ சன்னதி விமானங்களுக்கு பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து மலைக்கோயிலில் காலை 8 மணிக்கு 6ம் கால வேள்வி நடந்தது. மாலை 5.30 மணிக்கு 7ம் கால வேள்வி நடந்தது. இரவு 8.30 மணிக்கு நிறைவேள்வி, நறும்புகை, விளக்கு, படையல், திருவொளி வழிபாடு, தூமொழி பொழிதல், பன்னிருதிருமுறை விண்ணப்பம் போன்றவை நடந்தது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு 8ம் கால வேள்வி துவங்கப்பட்டு மலைக்கோயில் கும்பாபிஷேக பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 8.45 மணிக்கு திருச்சுற்று தெய்வங்களின் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். பின்னர் காலை 9.15 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமி ராஜகோபுரம் மற்றும் தங்ககோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பழனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளதால், நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

* ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு

கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட உள்ளன. இதற்காக பெங்களூருவில் இருந்து நேற்று பிரத்யேக ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் நிறுத்தி வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* 6,000 பக்தர்களுக்கு அனுமதி

கும்பாபிஷேக நேரத்தில் மலைக்கோயிலுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே  அனுமதிக்கப்படுகின்றனர்.  இவர்களில் 2  ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு  செய்யப்பட்டவர்களில் குலுக்கல்  முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள்.  கும்பாபிஷேகத்தின் காரணமாக  போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பஸ்  நிலையம் இடமாற்றம்  செய்யப்பட்டது. மலைக்கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வதற்காக அனுமதிச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஏனைய பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் பழநி மலைக்கோயில் வெளிப்பிரகாரம், கிரிவீதி மற்றும் பஸ் நிலையம் வரை சுமார் 18 இடங்களில் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: