குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: விருதுகளுடன் கொடிநாள் வசூலில் சாதனை படைத்த கலெக்டர்கள்

சென்னை:  குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் மாளிகையில் கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில், சமீபகாலமாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், மாநில அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வந்தது. குறிப்பாக தமிழ்நாடு பெயர் விவகாரம், சட்டப் பேரவையில், மாநில அரசு அளித்த கவர்னர் உரையில் மாற்றம் செய்து வாசித்தது உள்ளிட்டவை  பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், கவர்னர் ஆர்.என்.ரவி மீது அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக நாடாளுமன்ற  உறுப்பினர்கள் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் புகார் அளித்தனர்.

மேலும், கவர்னர் மாளிகையில் சமீபத்தில் நடைபெற்ற பொங்கல் விழா அழைப்பிதழில், தமிழ்நாடு என்ற வார்த்தையும், தமிழ்நாடு அரசின் இலட்சினை இடம்பெறவில்லை. இதனால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆளுநரின் பொங்கல் விருந்தை புறக்கணித்தனர். இந்த சூழலில், ஒவ்வொரு ஆண்டும், மெரினா கடற்கரை  சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பங்கேற்று தேசியக்  கொடியை ஏற்றி வைப்பது வழக்கம். அன்று மாலையில், கிண்டியில் உள்ள  தன்னுடைய மாளிகையில் கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது மரபாக  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளின் எம்பிக்கள்,  எம்எல்ஏக்களுக்கு கவர்னர் மாளிகை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக அழைப்பிதழில்  தமிழ்நாடு என்றும், அரசின் இலட்சினையை பொறித்தும் தேநீர் விருந்துக்கு கவர்னர் மாளிகை தரப்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில்,  கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை புறக்கணிப்பதாக அறிவித்தன. குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தொலைபேசி வாயிலாக நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் நேற்று மாலை  பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். தேநீர் விருந்தில் பங்கேற்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவியுடன் சிறிது நேரம் உரையாடினார். முதல்வர் உரையாடிய போது துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து, குடியரசு தின நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கவர்னர் பரிசுகளை வழங்கினார். அதன்படி,  குடியரசு தின விழாவில் அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளில், காவல் துறை ஊர்திக்கு முதல் பரிசும், தீயணைப்பு துறைக்கு 2வது பரிசும், செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு 3வது பரிசும் வழங்கப்பட்டது.  இதற்கான பரிசுகளை கவர்னர் ஆர்.என்.ரவியிடம் இருந்து டிஜிபி சைலேந்திர பாபு, தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ் குமார், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் பெற்றனர்.

கலை நிகழ்ச்சிகளில் முதல் பரிசு குயின் மேரிஸ் கல்லூரிக்கும், பள்ளி அளவில் அசோக்நகர் அரசு பெண்கள் பள்ளிக்கு முதல் பரிசு வழங்கினார். கொடிநாள் வசூலில் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதிக்கு முதல் பரிசும், திருவள்ளூர் மவட்ட கலெக்டர் ஜான் ஆல்பின் வர்கீஷ் 2வது பரிசும், தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 3வது பரிசும் பெற்றனர். மாநகராட்சி அளவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி முதல் பரிசும், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் 2வது பரிசும் பெற்றனர். மேலும் சிறப்பாக சமூக சேவை செய்ததற்காக வனிதா மோகன், கிருஷ்ணாமாச்சாரி ஆகிய இருவருக்கு தலா ரூ.10 லட்சத்தை கவர்னர் வழங்கி பாராட்டினார்.

Related Stories: