உண்டியல் பணம் எண்ணிக்கையை கோயிலின் யூ டியூப்பில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையை கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 48 முதுநிலை  கோயில்களுக்கு தனித்தனியாக யூ டியூப் சேனல்கள் இயங்கி வருகின்றன. இந்த கோயில்களில் நடைபெறும் உண்டியல் திறப்பு நிகழ்வை எல்காட் நிறுவனம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய முதுநிலை கோயில் செயல் அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து முதுநிலை கோயில்களின் முக்கிய நிகழ்வுகள் யூ டியூப் சமூக வலைதளத்தில் கோயில்களின் சேனலில் கோயில் நிர்வாகங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் அனைத்து முதுநிலை கோயில்களில் நடைபெறும் உண்டியல் திறப்பு நிகழ்வை எல்காட் நிறுவனம் மூலம் ஒளிபரப்பு செய்யாமல், கோயில் நிர்வாகம் மூலம் நேரடியாக கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்ய செயல் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் சட்டப்பிரிவு 46(i), 46(iii)ன் கீழ் விளம்புகை செய்யப்பட்டு அனைத்து பட்டியலை சேர்ந்த கோயில்களிலும் உண்டியல் திறப்பு நிகழ்வை கோயில் நிர்வாகம் மூலம் நேரடியாக  கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

யூ டியூப் சேனலில் உண்டியல் திறப்பு நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் வலைதள முகவரியை (யுஆர்எல்) ஐடிஎம்எஸ் தளத்தில் உள்ள திருக்கோயிலின் இணையதளத்தில் உள்ளீடு செய்து பொதுமக்கள் உண்டியல் திறப்பு நிகழ்வை எளிதில் காணும் வகையில் காட்சிப்படுத்த செயல்அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் லிங்க்ஐ அதற்காக வழங்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றி ஐடிஎம்எஸ் தளத்தில் உள்ள திருக்கோயில் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

இதற்கான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, உண்டியல் திறப்பு மற்றும் எண்ணிக்கை ஒளிபரப்பு செய்யப்படுவதை மண்டல இணை ஆணையர்கள் உறுதி செயய வேண்டும். இவ்வாறு ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: