எடை போடும் தேர்தல் இது அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திமுக கூட்டணி கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று நடந்தது. அப்போது, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: இடைத்தேர்தலில் வழக்கமாக, எதிர்க்கட்சிகள் பலமாக இருக்கும். எனவே, ஆளுங்கட்சி போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், திமுகவில் தோழமை கட்சிகளுக்கு உரிய மரியாதை வழங்கும் வகையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்றும், குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலை இருந்த போதிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினார். தற்போது நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நமது வேட்பாளர். தந்தை பெரியார் என்ற உணர்வு நம்மை இணைத்துள்ளது.  மறைந்த திருமகன் ஈவெரா தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக என்னை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.

திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். இந்த இடைத்தேர்தல் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடை போடும் தேர்தலாக கருதப்படுவதால் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

பேரவையில் பாராட்டி பேசியவர் செங்கோட்டையன்

குறிப்பிடும்படி எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, ‘இதே செங்கோட்டையன் தான் அரசின் செயல்பாடுகள் குறித்து, சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட முதல்வரை நாங்கள் பார்த்ததே இல்லை’ என்று பாராட்டி பேசினார். இது சட்டமன்ற குறிப்பிலேயே பதிவாகி உள்ளது’ என்றார் அமைச்சர் எ.வ.வேலு.

Related Stories: