74வது குடியரசு தின விழா நாளை கொண்டாட்டம்; நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு: டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சென்னையில் கவர்னர் ஆர்.என்.ரவி கொடியேற்றுகின்றனர்

சென்னை: குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சென்னையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுகின்றனர். நாடு முழுவதும் 74வது குடியரசு தினவிழா நாளை (26ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நிலையில் மிகுந்த எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் இவ்விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மூவர்ண கொடியேற்றுகிறார்.

அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின், கொடியேற்றும் முதல் குடியரசு தினம் இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும். இதற்காக நேற்று அவர் டெல்லி வந்து விட்டார். அது மட்டுமின்றி குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்து கொள்கிறது. வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையில் கலை நிகழ்ச்சிகளும், வீரதீர செயல்களும், ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்புகளும் நடைபெற உள்ளது.

முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ஏற்று கொள்கிறார். காலை 10.30 மணியளவில் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு குடியரசு தின விழா நிறைவடைகிறது. விழா தொடங்கும் முன்பாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தை முப்படைகளின் அணிவகுப்பு சென்றடையும். ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளது. மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை சாகசமும் நடைபெற உள்ளது. பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வரவுள்ளன.  இந்த நிகழ்ச்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் டெல்லியில் குவிந்துள்ளனர். ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியை தொடர்ந்து மாநிலங்களின் தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்கின்றனர். அதன்படி தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்வார். இதற்காக, மெரினா கடற்கரை  உழைப்பாளர் சிலை அருகில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாளை காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விழா நடைபெறும். இதில் அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

பின்னர் பதக்கம், பாராட்டு சான்றிதழ் பெற்றவர்கள் அனைவரும் ஆளுநர், முதல்வருடன் நின்று புகைப்படம் எடுத்து கொள்வர். 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவை சீர்குலைக்க தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், டெல்லி, சென்னை உள்பட நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம், பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரியும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.

சோதனை சாவடிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தி, முறைப்படி சோதனை செய்து வருகின்றனர்.  தலைநகர் டெல்லி முழுவதும் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தின அணிவகுப்பு நடக்கும் ராஜபாதை முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய வீரர்கள் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லிக்கு ரயில் மூலம் வரும் பார்சல் சர்வீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தேசிய கொடி ஏற்றப்படும் மெரினா காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் என 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 6,800 போலீசார் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எகிப்து அதிபர் சிசி-மோடி பேச்சுவார்த்தை

குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் இடம் பெற்றது. சிசியுடன் எகிப்து நாட்டின் 5 அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும், உயர் மட்ட தூதுக்குழுவும் வந்துள்ளது.

எகிப்து அதிபர் சிசிக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், எகிப்து அதிபர் சிசியும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மோடியும், சிசியும் விவசாயம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.

Related Stories: