ஈரோடு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்; வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தவிக்கும் எதிர்க்கட்சிகள்: திருவண்ணாமலையில் கே.எஸ்.அழகிரி பேச்சு

திருவண்ணாமலை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று  திருவண்ணாமலையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மண்டல ஆலோசனை கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசினார். திருவண்ணாமலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ‘கையோடு கைகோர்ப்போம், அரசியலமைப்பை பாதுகாப்போம்’ எனும் பரப்புரை நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் பெட்ேரால் விலை ₹70 ஆக இருந்தது. இப்போது, நூறு ரூபாயை கடந்துவிட்டது.

நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 முதல் 200 நாட்கள் வரை உயர்த்துவதற்கான திட்டத்தை வைத்திருந்தோம். ஆனால், அந்த திட்டம் இப்போது செயலிழந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 15 கோடி குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டோம். பாஜ ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் அவர்களை வறுமையின் பிடியில் தள்ளிவிட்டனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆண்டுக்கு 3 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்ேதாம். இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவால் நல்ல ஆட்சியை நடத்த முடியாது. ஆட்சி நடத்த பாஜ தகுதியிழந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில், ₹70 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்தோம்.

மாணவர்களுக்கு கல்வி கடன் அளித்தோம். ஆனால், இந்த ஆட்சியில் பெரு முதலாளிகளுக்கு ₹10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பதை கூட்டணி தலைவர்களுடன் தாமே முன்வந்து பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏனெனில், இதுதான் கூட்டணி தர்மம், பேராண்மை, நாகரீகம். ஆனால் அதிமுக-பாஜ கூட்டணியில் யார் போட்டியிடுவது என்றே தெரியாமல் குழம்பியுள்ளனர். வாசன் கட்சி போட்டியிட தயங்குகிறது. எடப்பாடி, ஓபிஎஸ், அண்ணாமலை ஆகியோரும் தயங்குகின்றனர். பாஜ வளர்ந்த கட்சி என பேசும் அண்ணாமலை, அதிமுக கூட்டணியில் அவரே களம் இறங்கி போட்டியிடலாமே.

அதிமுக, பாஜ கூட்டணி தேர்தலை சந்திக்கும் ஆற்றலை இழந்துவிட்டது. நாங்கள் வேட்பாளரை களம் இறக்கிவிட்டோம், பிரசாரத்தையும் தொடங்கிவிட்டோம். ஆனால், எதிர்தரப்பில் யார் போட்டியிடுவார்கள் என்றே தெரியாமல் தவிக்கின்றனர். இன்னும் களத்துக்கே வரவில்லை. இடைத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெறும்.

Related Stories: