நகைகளை பறித்துச் சென்றதாக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்: போலீசார் விசாரணை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை பறித்துச் சென்றதாக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த வித்யா என்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆய்வாளர் செந்தில்குமார் உதவி ஆய்வாளர் கருப்புசாமி பாண்டியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கிணத்துக்கடவு பழைய சோதனை சாவடி முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பநாதன் மற்றும் லியோ ஜெபிரியன் என்பது தெரியவந்தது இவர்கள் இருவரும் கோவையில் உள்ள மெரைன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் இவர்கள் கிணத்துக்கடவு லட்சுமிநகர் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ஐந்து பவுன் செயின் மற்றும் 3 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Related Stories: