திருவொற்றியூரில் சாலை விரிவாக்கத்தின்போது வீடுகளை இழந்த மீனவர்களுக்கு மாற்று குடியிருப்பு கட்டித்தர வேண்டும்: மண்டல குழு தலைவரிடம் கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் சாலை விரிவாக்கத்தின்போது, வீடுகளை இழந்த மீனவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என்று மண்டல குழு தலைவர் தனியரசுவிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் மீனவர் கிராமத்தில் சுமார் 450க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூர் விரைவு சாலை விரிவாக்க பணிகளுக்காக நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தில் இருந்த மீனவர்களின் குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு எல்லை அம்மன் கோயில் தெரு அருகே எண்ணூர் விரைவு சாலையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 10 அடுக்கு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் குடிசைகளை இழந்த நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தைச் சேர்ந்த மீனவ மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், ஒரு பிரிவு மீனவர்கள் இந்த அடுக்குமாடி குடியிருப்பு தரமானதாக இல்லை என்றும், தங்களது மீன்பிடி தொழில் பாதிக்காத வகையில் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தில் விரிவாக்க பணிக்கு போக மீதமுள்ள காலி இடத்தில் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்று கோரி புதிய 10 அடுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு வர மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் எதிர்ப்பு மீனவர்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. இதையடுத்து, கடந்த 2018 சுமார் 363 மீனவ குடும்பங்கள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பை பெற்றுக் கொண்டு குடியமர்ந்தனர். மீதமுள்ள சுமார் 83 மீனவ குடும்பங்கள் ஆங்காங்கே வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் தங்களுக்கு நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்திலேயே வீடு கட்டி தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு இல்லாமல் பாதிக்கப்பட்ட நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் நேற்று திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசை மண்டல அலுவலகத்தில் சந்தித்து நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தில் காலியாக உள்ள இடத்தில் தங்களுக்கு குடியிருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், ‘‘பல தலைமுறைகளாக நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தில் வாழ்ந்து வந்தோம். சாலை விரிவாக்கத்திற்கு எங்களது குடிசைகள் அகற்றப்பட்டதால் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதனால் எங்களுக்கு மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் வருமானம் இன்றி வறுமையில் வாடுகிறோம். விரிவாக்கத்திற்கு போக மீதி இடம் சுமார் இரண்டு ஏக்கர் அளவிற்கு காலியாக உள்ளது. இந்த இடத்தை தனியார் பருப்பு கம்பெனி நிறுவனம் தனது பராமரிப்பில் வைத்துள்ளது. அந்த இடத்தை மீட்டு குடியிருப்பு இல்லாமல் வாடகை வீட்டில் அவதியுற்று வரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: