தங்கசாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தை ரூ.10 கோடியில் மேம்படுத்தும் பணி: ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ அடிக்கல்

தண்டையார்பேட்டை: தங்க சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தை ரூ.10 கோடியில் மேம்படுத்தும் பணியை அடிக்கல் நாட்டி ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட தங்கசாலை மூலக்கொத்தளம் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்கள் பயிற்சி பெறும் இயந்திரங்கள் மிகவும் சேதமுற்று, கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, இந்த தொழில் பயிற்சி மையத்தை நவீனப்படுத்தி தரும்படி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், பயிற்சி மையத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து தரம் உயர்த்தி தரவும், புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது தொழில் பயிற்சி மையத்திற்கு ரூ.3 கோடியே 73 லட்சத்தில் கட்டுமான பணிகளும், சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் உபகரணங்களும் மொத்தம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. தற்போது  கட்டுமான பணிகளை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்  ஐட்ரீம் ஆர்.மூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பயிற்சி மையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு படித்து முடித்தவுடன் முன்னணி நிறுவனங்களில் பணிகள் மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எம்எல்ஏ மூர்த்தி தெரிவித்தார். நிகழ்ச்சியில் ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி, வட்ட திமுக செயலாளர் கவுரிஷ்வரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: