மாதவரத்தில் திறந்து கிடந்த கால்வாயில் விழுந்தது கார்: டிரைவர் உயிர் தப்பினார்

திருவொற்றியூர்: மாதவரம் பகுதியில் பழுதடைந்து திறந்து கிடந்த கால்வாயில் கார் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அதை ஓட்டி வந்தவர் உயிர் தப்பினார். கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. கொளத்தூர், ரெட்டேரியில் இருந்து மாதவரம் தணிகாசலம் நகர் 80 அடி சாலை வழியாக கொடுங்கையூர் வரை செல்லும் கழிவுநீர் கால்வாய் உள்ளது. சுமார் 24 அடி அகலம் உள்ள இந்த கால்வாயில் சுற்றுவட்டாரத்திலிருந்து மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்கிறது.

இந்நிலையில் தணிகாசலம் நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் தடுப்பு சுவர் பல இடங்களில் பழுதடைந்து உடைந்து திறந்து கிடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாதவரம் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, திறந்தவெளியாக உள்ள கால்வாய் மீது கான்கிரீட் தளம் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை மாதவரத்தை சேர்ந்த மாரிமுத்து (65) என்பவர் தணிகாசலம் நகர் வழியாக கால்வாய் ஓரம் காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது கார் நிலைதடுமாறி தடுப்பு சுவர் உடைந்து திறந்து கிடந்த கால்வாய் வழியாக கால்வாயில் விழுந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக மாரிமுத்து எந்த ஒரு காயமும் இன்றி உயிர் தப்பினார். இதை பார்த்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். மாதவரம் மண்டல அதிகாரிகள் விரைந்து வந்து ராட்சத கிரேன் மூலம் கயிறு கட்டி கால்வாயில் விழுந்த காரை இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: