வடமாநிலங்களில் நில அதிர்வு லக்னோவில் 4 மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் பலி

புதுடெல்லி: நேபாளத்தில் நேற்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. இதன் எதிரொலியாக இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இதில் லக்னோவில் 4 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் பலியானார்கள். மேற்கு நேபாளத்தில் நேற்று மதியம் 2.43 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் கவுமுல் கிராமத்தில் ஒரு பெண்  பலியானார்.

ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. ஒரு கோயிலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், வட மாநிலங்களில் பல இடங்களிலும் கடும் நிலஅதிர்வு உணரப்பட்டது. பல்வேறு இடங்களில் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. இதில் லக்னோவில் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள 4 அடுக்கு மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

அந்த கட்டிடத்தில் 4 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மொத்தம் 8 பேரில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். மீதம் உள்ள 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.

Related Stories: