சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இதில் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து, தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்கக் கோரியும் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் மகேசுக்கு எதிராக ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.