யாராவது நில்லுங்கப்பா கெஞ்சும் எடப்பாடி: செலவுகளை ஏற்பதாக ஆசை வார்த்தை; 18 மாஜி மந்திரிகளுடன் ஆலோசனை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், அடுத்த மாதம் 27ம்தேதி நடக்கிறது. திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஒ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் வேட்பாளரை நிறுத்தப்போவதாக கூறி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் போட்டியிட யாரும் முன்வரவில்லை. அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கவே கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி கோஷ்டியினர் தீவிரமாக இருக்கின்றனர். இந்நிலையில், வேட்பாளராக யாரை நிறுத்தலாம்? இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? சின்னத்தை தேர்தல் கமிஷனில் கேட்டு பெறுவது எப்படி? என்பது குறித்து ஆலோசனை நடத்த, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாஜி அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து நேற்று மாலை, சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு தம்பிதுரை எம்பி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திரபாலாஜி, கே.பி.முனுசாமி, இசக்கி சுப்பையா, காமராஜ், கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, பெஞ்சமின், ஆர்.பி.உதயகுமார், வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. வேட்பாளராக யாரும் போட்டியிட முன்வராததால் யாராவது நில்லுங்கப்பா, செலவுகளை நாங்களே ஏற்கிறோம் என்று எடப்பாடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட யாரை நிறுத்தலாம் என ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. தேர்தல் செலவுகளை கட்சியே ஏற்றுக்கொள்ளும் என கூறியதையடுத்து, அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். அதே போல, இரட்டை இலை சின்னத்தை எப்படி பெறுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்கவே கூடாது எனவும் தெரிவிக்கபட்டது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், கட்சி நம்மிடம் தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், அனைவரும் பணியாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது,’’ என்றார்.

Related Stories: