பிபிசி ஆவணப்பட தடை விவகாரம் உண்மை வெளியில் வந்தே தீரும்: ராகுல் காந்தி பதில்

ஜம்மு: பிபிசி ஆவணப்பட தடை விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘உண்மையை தடுக்க முடியாது. அது எப்படியும் வெளியில் வந்தே தீரும்’’ என கூறி உள்ளார். இங்கிலாந்தின் பிரபல ஊடகமான பிபிசி, ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில் 2 பகுதியாக ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இது 2002 குஜராத் கலவரத்தின் போது நடந்த உண்மை சம்பவங்களை விளக்கும் விதமான ஆவணப்படம். இதில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதால், ஒன்றிய அரசு இப்படத்தை இந்தியாவில் சமூக ஊடகங்களில் தடை செய்துள்ளது. ஆனாலும் இந்த ஆவணப்படம் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஜம்முவில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, பிபிசி ஆவணப்பட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ராகுல் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: வேதங்களை நீங்கள் படித்திருப்பீர்கள். பகவத் கீதை, உபநிஷங்களில் என்ன கூறியிருக்கிறார்கள் என்றால், ‘உண்மை எப்போதும் வெளிவரும்’. உண்மையை நீங்கள் தடுக்கலாம். பத்திரிகைகளை அடக்கலாம். சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தலாம். ஆனால் உண்மைதான் உண்மை. அது பிரகாசமாக பிரகாசிக்கக் கூடியது. எப்படியும் வெளியில் வந்தே தீரும். எனவே எந்தவொரு தடை, அடக்குமுறை மற்றும் மக்களை பயமுறுத்தினாலும் உண்மை வெளிவருவதை தடுக்க முடியாது.

எனது பெயரை கெடுக்கவும் (ராகுலை பப்பு என கேலி செய்வதை பாஜவினர் வாடிக்கையாக வைத்துள்ளனர்) ஆயிரக்கணக்கான கோடிகளை பாஜ செலவிடுகிறது. நீங்கள் யாரையும் இழிவுபடுத்தலாம். யாருடைய பெயரையும் சிதைக்கலாம். எந்த அரசையும் வாங்கலாம், பணத்தால் எதையும் செய்யலாம். ஆனால் அது உண்மையாக இருக்காது. உண்மை எப்போதுமே பணத்தையும் அதிகாரத்தையும் ஒதுக்கித் தள்ளும். இந்த அப்பட்டமான உண்மை பாஜ தலைவர்களுக்கு மெதுவாகத் தெரியவரும். இவ்வாறு ராகுல் கூறினார்.

* நடிகை ஊர்மிளா பங்கேற்பு

ஜம்முவின் நக்ரோடாவில் நேற்று காலை ராகுல் மீண்டும் நடைபயணத்தை தொடங்கிய போது, பிரபல பாலிவுட் நடிகையும், அரசியல் தலைவருமான ஊர்மிளா மடோன்கர் (48) பங்கேற்றார். அவர் காஷ்மீரி பண்டிட்களின் பாரம்பரிய உடையான காஷ்மீர் பெரான் அணிந்து ராகுலுடன் சிறிது தூரம் நடைபயணம் மேற்கொண்டார். மேலும், பிரபல தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகனும் நேற்று ராகுலின் நடைபயணத்தில் இணைந்தார்.  

* ஆதாரம் அவசியமில்லை

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ‘‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதற்கு ஒன்றிய பாஜ அரசு எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை’’ என சந்தேகத்தை கிளப்பியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் மீது காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், ‘‘காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. சர்வாதிகார கட்சி அல்ல. திக்விஜய் சிங்கின் தனிப்பட்ட கருத்துக்களை நாங்கள் ஆதரிக்கவில்லை. ராணுவ நடவடிக்கைகளுக்காக, இந்திய ராணுவம் எந்த ஆதாரத்தையும் தர வேண்டிய அவசியமில்லை. நமது ராணுவம் அதன் வேலைகளை மிகச்சிறப்பாக செய்கிறது. கருத்து சுதந்திரத்தை காங்கிரஸ் அனுமதிக்கிறது. ஆனால் பாஜ, ஆர்எஸ்எஸ்சில் அந்த பழக்கம் இல்லை’’ என்றார்.

Related Stories: