ஏ.சி.சண்முகத்தை சந்தித்து ஆதரவு கேட்டபிறகு பேட்டி பிரதமர் மோடியின் பேச்சை எடப்பாடி கேட்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் திடீர் அழைப்பு

சென்னை: ‘பிரதமர் மோடி சொல்வதை எடப்பாடி கேட்க வேண்டும்’ என்று ஏ.சி.சண்முகத்தை சந்தித்து ஆதரவு கேட்ட பிறகு நிருபர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளும் (ஓபிஎஸ் - இபிஎஸ்) போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி கட்சி தலைவர்களை குறிப்பாக சிறிய கட்சியாக இருந்தாலும் அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்து வருகிறார்கள்.

சென்னை தி.நகரில் உள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை நேற்று முன்தினம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பென்ஜமின் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, இடைத்தேர்தலில் புதிய நீதி கட்சி ஆதரவை அதிமுகவுக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது, வருகின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தங்கள் அணிக்கு புதிய நீதி கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது, ஓபிஎஸ் அணியை சேர்ந்த வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் எடப்பாடி அணியின் நிலைப்பாட்டை உலக மகா அரசியல் வித்தகர் ஜெயக்குமார் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் அணி தேர்தலில் நோட்டோ வாங்கிய ஓட்டு கூட வாங்காது என்று சொல்கிறார். அவர்களை தேர்தல் களத்தில் சந்திப்போம். இரட்டை இலை சின்னம் ஒதுக்கும் உரிமை, தேர்தல் ஆணைய விதிப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால்தான் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் அதிமுக விதிக்கு முரணாக தாமாகவே இடைக்கால பொதுச்செயலாளர் என்றும் அறிவித்து விட்டார்கள்.

2 பேரும் (ஓபிஎஸ் - இபிஎஸ்) சேர்ந்து ஒரே வேட்புமனுவில் தேர்தலில் போட்டியிட்டு அடிப்படை உறுப்பினர்களால் சட்டவிதிப்படி தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். எங்கள் பதவி 2026 வரை இருக்கிறது என்று, அந்த பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் கொடுத்துள்ளோம். அவர்களும் அதிமுகவின் சட்ட விதிப்படி அமைப்பு ரீதியிலான தேர்தலை நடத்தலாம் என்று கூறினர். அதன்படி அமைப்பு ரீதியிலான தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. இவ்வளவு நடந்த பிறகு புதிய சூழ்நிலையை, யாரும் விரும்பாத, ஒன்றரை கோடி தொண்டர்கள் விரும்பாத சூழ்நிலையை யார் உருவாக்கினார்கள். அவர்கள்தானே (எடப்பாடி அணி) உருவாக்கினார்கள்.

திரும்ப திரும்ப பல நேரங்களில் சொல்லி இருக்கிறேன். என்னை பொறுத்தவரைவில் எந்த சூழ்நிலையிலும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காதநிலையில், அதற்கு பன்னீர்செல்வம் காரணமாக இருக்க மாட்டான் என்று நான் சொல்லி விட்டேன். அதிமுக சட்ட விதிப்படி நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்து போட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அவர் தாமாகவே முன் வந்து தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார், துறந்து விட்டார். மறுபடியும் அந்த உரிமையை அவர் கோர முடியாது.

எம்ஜிஆர் மாளிகையை நோக்கி தான் எங்களது கார் செல்லும் என்று சொன்னேன். கமலாலயம் சென்றுவிடாதீர்கள் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னார். மற்ற இடங்களுக்கு செல்ல மாட்டான் என்று சொல்லவில்லை. பிரதமர் மோடி 2 அணியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சொல்வதாக கேட்கிறீர்கள். ஒரு பெரிய மனுஷன் (பிரதமர் மோடி) நல்லது சொல்கிறார். அதை கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக சட்ட விதிப்படி நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். 2 பேரும் சேர்ந்து கையெழுத்து போட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

Related Stories: